Search This Blog

Saturday, January 22, 2011


என் வீட்டு தென்னை மரம் ""


என் மனம் லட்சம் லட்சமான 
சிக்கல்களில் பின்னிக்கொண்டிருந்தது  
வீட்டுக்கு வெளியில் வந்து
திண்ணையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தேன்
""தொப்பென்ற "" ஒரு சத்தம் கலைத்தது
என் சிந்தனையை :
நொடிப்பொழுதில் திரும்பி பார்த்தேன் 
""என் வீட்டு தென்னை மரம் ""
தேங்காயோடு சண்டை பிடித்து கோபத்தில்
நீ வேண்டாமென்று வீசிஎரிந்திருக்கிறது



கலைந்த என் சிந்தனை
படஎடுக்கிறது என் வீட்டு
தென்னை மரத்தின் பக்கம்
என் அம்மா சொல்லியிருக்கிறாள்
எனக்கும் என் வீட்டு தென்னை மரத்துக்கும்
ஒரே வயதாம் என்று
நான் பிறந்த வருடத்தில் என் தாத்தா
நாட்டினாராம் அந்த மரத்தையும் '
என்னைப் பார்த்து பார்த்து
என்னை விட உயரமாய் வளர்ந்து விட்டது .

உயரமாய் இருப்பதால் நாலாபக்கமும்
நடக்கும் நடப்புக்கள் அவ்வப்போது என் வீட்டு
தென்னை மரத்தின் காதுக்கு எட்டிவிடுகிறது
சோகசெய்திகேட்டு தலை சாய்த்து
அனுதாபம் தெரிவித்து பார்த்திருக்கிறேன்
திருமணங்கள் ,ஊர்த்திருவிழாக்களின் போது
எகிறிக்குதித்து ஆரவாரித்ததையும்  பார்த்திருக்கிறேன்
பச்சைக்கிளிகள் மணிப்புறாக்கள்;சிட்டுக்குருவிகள்
வந்தமர்ந்தால் ஏதோ அவட்ட்ருக்கு
சிம்மாசனமாய் அவதாரமெடுத்த மமதையில்
குலுங்கி குலுங்கி சிரித்தும் பார்த்திருக்கிறேன்

பின்னிரவில் ஒரு அழுகுரல்
சன்னமாய் என் செவிகளில் கேட்க
என் அறையின் ஜன்னலைத்திறந்து
யாரென்று பார்த்தேன் ...........அட
"" என் வீட்டு தென்னை மரம் ""
குமுறி குமுறி அழுதுகொண்டிருந்தது
மெதுவாய் கேட்டேன் என்ன? என்று
லட்சியவாதிகள் இதயம் நரம்புகளால் அல்ல
இடிதாங்கி கம்பிகளால் பின்னப்பட்டிருக்க வேண்டும்
என்று மீண்டும் அழ ஆரம்பித்தது ,
நிறுத்து மரமே ! -உனக்கென்ன
இலட்சியவாதிகள் பற்றி தெரியும்? என்றேன்
உனக்கு வேண்டுமானால் இரண்டே இரண்டு செவிகள்
இருக்கக்கூடும் ஆனால் எனக்கோ உடம்பெல்லாம் காதுகள்
ஆங்காங்கே அவனவன் அழும்
அவல குரல் என்னை  ஏதோ செய்கிறது
என்றது "" என் வீட்டு தென்னை மரம்""


மரத்துக்கு, அதுவும் என் வீட்டு தென்னை மரத்துக்கு
இத்தனை இறங்கும் மனமா?  
மனிதனை விட ""என் வீட்டு தென்னை மரம் "'
ஒருபடி உயர்ந்த்தது தான் என்று எண்ணியபடி
ம்ம்..........ம்ம்......... என்று கதை கேட்பதை போல்
தலையசைத்து கேட்டுகொண்டிருந்த என்னிடம்
அதிஷ்டம் ,விதி, காலநேரம் ,
இந்த வார்த்தைகளை
உண்டு பண்ணியவனும் சரி ,
உதிர்ப்பவனும் சரி , வாழ்வியல் போராட்டங்களில்
பின் வாங்கியே வாழ்கிறார்கள்
என்று ஒரு புது தத்துவத்தையும் கற்பித்தது 
"" என் வீட்டு தென்னை மரம்""  எனக்கு 



சரி இவ்வளவு பேசுகிறாயே ! உனக்கு
சோகங்கள் , போராட்டங்கள் எதுவுமே இல்லையா?
என்றேன் அப்பாவியாக 
பலமுறை புயலடித்தும் ஓரமாய் 
ஒதுங்கி ஊய்ந்துவிடவில்லையே ! நான் 
போராடுகிறேன்
போராட்டமில்லாத உயிரில்லையே 
காற்றடித்தால் காற்றோடு போராடுகிறேன் ,
புயலடித்தால் புயலோடு போராடுகிறேன் ,
எனக்கே இவ்வளவு தைரியம்   இருக்கும் போது
உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும்
மனிதனுக்கு போராடும் குணம் இருக்கிறது
போரட்டமில்லா  வாழ்க்கை ,
நீரோட்டமில்லா  நதி , -என்று முடித்தது
"" என் வீட்டு தென்னை மரம் ""


என்னையுமறியாமல் சிரித்து விட்டேன்
"" என் வீட்டு தென்னை மரம் "" கோபத்தில்
நீ  சிரிக்கிறாய்... என் நாடு அழுகிறது .....
நீ வாழ்கிறாய் என் மண் அழிகிறது ..
நீ அடைந்து விட்டாய் என் மக்கள் இழந்து விட்டனர்  என்று
மீண்டும் மீண்டும் விம்மத் தொடங்கியது ....
நிறுத்து மரமே !
உனக்கு நாட? உன் மண்ணா? உன் மக்களா?
 இது என்ன புது கதை என்றேன்
பாவம் நீ பேதை பெண் குழந்தை தனம்
உன் முகத்தில் தெரிகிறது
எப்போது இந்த மண்ணில் விதைக்கப்பட்டேனோ
அப்போதே நம் மண்ணின் மீது எனக்கு
பற்று வந்து விட்டது
எத்தனை வீட்டின் மேற்கூரைகள்
உடைத்தெரிக்கப்பட்டதை நான் அல்லவோ 
பார்த்திருக்கிறேன் - அதனால் எத்தனை
மாடப்புறாக்கள் பதறி பறந்தடித்தன 
என்று எனக்கல்லவோ தெரியும்
மூச்சு  திணற  மூர்ச்சையாகி போன 
உயிர்களின் சத்தம் இன்றும்  கூட  
எனக்கு கேட்கிறது _ பெண்ணே
மனிதர்களுக்கு இதயத்தை அறுத்து வீசி விடச்சொல்
என்றது ,,
"' என் வீட்டு தென்னை மரம் "'


அன்று முதல் இன்று வரை
"" என் வீட்டு தென்னை மரம் ""
எனக்கொரு போதிமரம்
தலை குனிந்து மன்னித்துகொள் மரமே
என்றேன் சரி பஞ்சனைக்கு போ " காலைக்குளிர் "
உனக்கு ஒத்துவராது என்றது .
மனிதாபிமானம் நிறைந்து 
இப்போதும் எனக்கு பிடித்த மரம்
நான் நேசிக்கும் மரம்
"" என் வீட்டு தென்னை மரம் ""
அது மரமல்ல ஞானி

 

இந்த கவிதை சக்தி காற்றலையில் கவிராத்திரியில் ஒலிபரப்பானது இந்த தலைப்பில் நான் கவி வரைய 
காரணமானவர் கவிஞர் சடாகோபன்  கவிராத்திரியை நடத்தும் அவர் வழங்கிய தலைப்பு .  பின்னர் என்னை மறந்து நானு ஒரு தென்னையாய் அவதாரமெடுத்த கவிதை தான் இது . சடா அண்ணாவுக்கு நன்றிகள் இந்த சமயத்தில் உரித்தாகட்டும் ...  
இப்படிக்கு dilz 

No comments:

Post a Comment